பட்டா வழங்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பட்டா எண் வழங்க விவசாயியிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-09-15 13:30 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், என்.புதுக்கோட்டை கிராமம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (40) விவசாயி. அவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி வி.ஏ.ஓ சதாசிவத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

அதற்கு ரூ. 500 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, பட்டா எண் வழங்க முடியும் என விஏஓ சதாசிவம் கண்டிப்பாக கூறிவிட்டார். லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொள்ளாத சரவணன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி ரசாயண பவுடர் தடவிய ரூ.500ஐ விவசாயி சரவணன், விஏஓ சதாசிவத்திடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதாசிவத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு, கடந்த 16 ஆண்டுகளாக நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சதாசிவத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையொட்டி விஏஓ சரவணன் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

Similar News