பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்ற 2 பேர் கைது - 1,500 லிட்டர் பறிமுதல்

நாமக்கல் அருகே, பயோ டீசல் என்ற பெயரில் லாரிகளுக்கு கலப்பட டீசல் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து , 1,500 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-26 03:51 GMT

கலப்பட டீசல் விற்பனைக்காக தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த டேங்கர்.

நாமக்கல் அருகே உள்ள, தொட்டிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டம் ஒன்றில், டேங்கர் லாரிகளில், கலப்பட டீசலை கொண்டு வந்து, பயோ டீசல் என்ற பெயரில் லாரிகளுக்கு விற்பனை செய்வதாக, கலெக்டர் ஸ்ரேயா சிங்குக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சப் கலெக்டர் கோட்டைக்குமார், டி.எஸ்.பி. சுரேஷ், தாசில்தார் தமிழ்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில், தோட்டத்தில் பெட்ரோல் பங்க் போல் டேங்கரில் டீசல் நிரப்பி பம்ப் மூலம் லாரிகளுக்கு வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், டேங்க் அமைத்து அவரது உறவினர்கள் மணி, தமிழ்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் டேங்கர் லாரியில் டீசலை கொண்டு வந்து அதில் நிரப்பி, லாரிகளுக்கு குறைந்த விலையில், பயோ டீசல் என்ற பெயரில் கலப்பட டீசல் விற்றது தெரியவந்தது.

அந்த டேங்கில் இருந்து 1,500 லிட்டர் கலப்பட டீசலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதை விற்பனை செய்த தமிழ்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரை உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, சப் கலெக்டர் கோட்டைக்குமார் கூறியதாவது:

கலப்பட டீசல் எப்படி தயாரித்துள்ளனர் என்பது ஆய்வக சோதனை முடிவில் தான் தெரியவரும். லாரிகளுக்கு ஒரு லிட்டர் கலப்பட டீசல் ரூ.75க்கு விற்பனை செய்கின்றனர். தற்போது, வெளிச்சந்தையில், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வாகனங்கள் பழுதானாலும் பரவாயில்லை என்று குறைந்த விலையில் டீசல் கிடைப்பதால் பல லாரி உரிமையாளர்கள் இந்த டீசலை வாங்கி உபயோகித்து வருவது தெரிய வந்துள்ளது. அந்த விவசாய தோட்டத்தில், 2டேங்கள் லாரிகள் உள்ளன. ஒரு லாரியில் வெளியில் இருந்து போலி டீசலை வாங்கிவந்து, மற்றொரு டேங்கில் நிரப்பி விற்பனை செய்துள்ளனர். முழுமையாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

Tags:    

Similar News