மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு

மோகனூர் காவிரி பாலம் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-28 12:01 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி பாலம் சோதனை சாவடியில், தேர்தல் கமிஷன் போலீஸ் பார்வையாளர் உஷாராதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நாமக்கல் லோக்சபா தொகுதியில் வரும் ஏப். 19ல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில், தலா, 3 என, மொத்தம் 18 தேர்தல் பறக்கும் படை, தலா 3 வீதம் மொத்தம் 18 நிலையான கண்காணிப்புக்குழு, தலா ஒன்று வீதம் மொத்தம் 6 வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 42 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், சுழற்சி முறையில், தொகுதியில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசு பொருட்கள் எவ்வித ஆவணமும் இன்றி எடுத்து செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல் லோக்சபா தேர்தலில், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற, போலீஸ் பார்வையாளராக உஷாராதா என்ற பெண் போலீஸ் அதிகாரியை, இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. அவர், நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்றார். பின்னர், நாமக்கல் மாவட்டம் மோகனூர் - வாங்கல் காவிரி ஆற்றுப் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வாகனங்களை சோதனை செய்வதற்காக பராமரிக்கப்படும் பதிவேடுகள், கம்ப்யூட்டர் பதிவுகள் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், இன்ஸ்பெக்டர் சவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி முழுவதும்  இதுபோன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News