அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூ82,000 அபராதம் விதித்த ஆர்டிஓ

மதூர் பகுதிகளில் கனரக லாரிகள் அரசு விதிகளை பின்பற்றாமல் செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் ஆர்டிஓ கலைவாணி, வட்டாட்சியர் தீடிர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-05-25 02:45 GMT

வாலாஜாபாத் அடுத்த மதூர் பகுதியில் அதிக பாரம் ஏற்றி செல்வதாக வந்த புகாரினை தொடர்ந்து வருவாய்த்துறை குழுவினருடன் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆர்டிஓ கலைவாணி. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாக்கம் மாகரன் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளான தம்மணூர் ,  மதூர் ,  சிறுதாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல் குவாரிகள் மற்றும் கல் அரவை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 

நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் இங்கிருந்து கருங்கற்கள் மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச் சென்று புறநகர் பகுதிகளுக்கு சப்ளை செய்து வருகிறது. குறிப்பாக கருங்கற்களை திருநீர்மலை குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்ளை செய்யவும் இந்த கனரக லாரிகள் ஈடுபட்டு வருகிறது. 

இதுபோன்ற பொருட்களை எடுத்துச் செல்லும் நிலையில் அதிக பாரம் ஏற்றுதல் கூடாது பொருட்களின் மீது தார்ப்பாய் போட்டு எடுத்து செல்லுதல் என்பது போன்ற அரசு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் லாரி ஓட்டுநர் கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் கல் அறுவை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் இவைகளை அனைத்தையும் மீறி கனரக லாரிகள் செயல்பட்டு வருவதாகவும், அவ்வப்போது இது போன்ற நிலையில் விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். 

இதனை அடுத்து அவ்வப்போது கனிமவள அதிகாரிகள் , வருவாய் கோட்டாட்சியர்,  வட்டார போக்குவரத்து அலுவலர் , மோட்டார் வாகன ஆய்வாளர் என பலர்  ஆய்வு மேற்கொண்டு அதிகாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்நிலையில் வாலாஜாபாத் அடுத்த மதூர் பகுதியில் இருந்து தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்ததின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது விதிகளை மீறி திருமுக்கூடல் வழியாக வந்த அனைத்து லாரிகளையும் நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் அதிக பாரம் ஏற்றி சென்ற இரு லாரிகளுக்கு ரூபாய் 82,000 அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் தார்ப்பாய் போடாமல் சென்ற லாரிகள் போதிய ஆவணங்கள் இன்றி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News