காஞ்சிபுரம் அருகே வையாவூரில் சுகாதாரமற்ற குடிநீரால் மூதாட்டி உயிரிழப்பு

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் பிரச்சினை காரணமாக மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

Update: 2024-06-14 10:06 GMT

வையாவூர் ஊராட்சி மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில்  திடீரென நேற்று முதல் கிராம மக்கள் பல பேருக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் வயிற்றுப் போக்கின் காரணமாக உயிரிழந்தாக கூறப்பட்ட நிலையில் அந்தப் பகுதி முழுவதுமே தொற்று நோய் ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ என பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து கிராமம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடுக்கி விட்டுள்ளார்.

குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் பாஸ்கர், மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யவும் ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அனைத்தும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வயிற்று போக்கு ஏற்பட்டதற்கு குடிநீர் பிரச்சினை காரணமாக  இருக்குமோ என பொதுமக்கள் அச்சப்படும் நிலையில் குடிநீரை பரிசோதனை செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News