காஞ்சிபுரம் மாவட்டம்; 5 தாலுகாக்களில் ஜமாபந்தி துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நடத்தப்படும் ஜாமபந்தி நிகழ்ச்சியை, ஆட்சியர் கலைச்செல்வி வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

Update: 2024-06-14 09:30 GMT

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்க விழா நிகழ்வில் வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய வட்டாட்சியர் சதீஷ்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1433 என கூறப்படும் ஜமாபந்தி நிகழ்வினை வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் வருவாய்துறை சார்பில் வருவாய் துறை சார்ந்த தீர்வுகளுக்கான மனுக்கள் அளிக்கும் விதமாக வருவாய் தீர்வாயம் பசலி 14 33 என கூறப்படும் ஜமாபந்தி நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.


அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களில் குறுவட்டம் வாரியாக  துவங்கி நடைபெறுகிறது.

வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று தென்னேரி குறுவட்டம் சார்ந்த எட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.


மனுக்களை பெற்ற ஆட்சியர் அதனை உரிய தீர்வு காணும் வகையில் வருவாய்த்துறை ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1:30 வரை இந்நிகழ்வு விடுமுறை நாட்களைத் தவிர 21ம் தேதி வரை நாள்தோறும் நடைபெறும்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி , வட்டாட்சியர் சதீஷ் , தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Similar News