பணியில் ஒழுங்கீனம்: நம்பியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் நிரந்தர பணி நீக்கம்

பணியில் கையூட்டு மற்றும் தொடர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்த ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2024-05-26 03:30 GMT
முதல்நிலை காவலர் பூமாலை.

பணியில் கையூட்டு மற்றும் தொடர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்த ஈரோடு மாவட்டம் நம்பியூர் காவல் நிலைய முதல்நிலை காவலர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நம்பியூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக சேலம் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பூமாலை (வயது 35) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், கடந்த ஆண்டு அந்தியூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, தீபாவளி பண்டிகையின் போது, உணவகம் ஒன்றில் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. புகாரையடுத்து, இவர் பவானி காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பூமாலையிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் விசாரணையில், காவலர் பூமாலை தீபாவளி வசூலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பூமாலையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் நம்பியூர் காவல் நிலையத்தில் பூமாலை முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், பூமாலை கையூட்டு மற்றும் தொடர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்ததையடுத்து, காவல்துறை இயக்குநர் உத்தரவுப்படி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பூமாலையை நிரந்தர பணி நீக்கம் செய்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட பூமாலை கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் 2ம் நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்து உள்ளார். தொடர்ந்து, ஈரோடு போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் . இதனை, அவரது மனைவி கண்டித்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையில் மனமுடைந்த அவரது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News