‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர் அறிவிப்பு
‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர் என அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘நான் செத்துட்டேன்’ என லால்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. அறிவித்து இருப்பதால் தி.மு.க.வின் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தர பாண்டியன். மிகவும் அமைதியான நபர் என பெயர் எடுத்த இவர் கடந்த 2006 முதல் தொடர்ந்து இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று பதவி வகித்து வருகிறார்.
லால்குடி சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட இருக்கும் தாலுகா அலுவலகம் , சார்பதிவாளர் அலுவலகம் ,போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய ஆய்வு செய்வதற்காக தமிழக உள்ளாட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் லால்குடி பகுதிக்கு வந்தனர். இந்த தகவல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான சௌந்தர பாண்டியனுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் விரக்தி அடைந்த சௌந்தர பாண்டியன் எம்எல்ஏ, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான் இயற்கை எய்தியதால் லால்குடி சட்டமன்ற தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது. என தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார்.
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி தொகுதி மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து நான்கு முறை இருப்பதால் மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்ற நபராக சௌந்திர பாண்டியன் விளங்கி வருகிறார்.
இது பற்றி சவுந்தரபாண்டியனிடம் கேட்டபோது சில மாதங்களாகவே சட்டமன்ற உறுப்பினரான எனக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு முறைப்படி அதிகாரிகள் தகவல் தெரிவிப்பதில்லை. புறக்கணித்து வருகிறார்கள்.என்ன காரணம் என்று தெரியவில்லை. அதே போல் தான் நேற்று முன்தினம் அமைச்சர் ஆய்வுக்கு வருவது தொடர்பாக எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால்தான் முகலூல் பக்கத்தில் நான் இயற்கை எய்திவிட்டதாக பதிவிட்டேன் என்று கூறினார்.
அதிகாரிகள் தரப்பில் இதுபற்றி கேட்ட போது திடீர் என அமைச்சர் ஆய்வுக்கு வந்து விட்டதால் தகவல் தெரிவிக்க முடியவில்லை எனக் கூறினார்கள்.
திருச்சி மாவட்டத்தில் அமைச்சர் நேருவுக்கும் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே புகைச்சல் இருந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினருக்கு எந்த மரியாதையும் அமைச்சர் கொடுப்பதில்லை அவருக்கு அவரை மாவட்ட செயலாளராக ஆக்குவதற்கு தடுத்து விட்டார் என பல புகார்கள் திமுகவினர் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனாலும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்டபோது அந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி சட்டமன்ற உறுப்பினரான சௌந்தரபாண்டியன் தனது பங்குக்கு வேலை செய்து வெற்றி பெற செய்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் இப்போது உட்கட்சி பூசல் மீண்டும் வெடித்துள்ளது. இந்த சம்பவம் திருச்சி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமைச்சர் நேருவின் டார்ச்சர் தாங்க முடியாமல் சௌந்தரபாண்டியன் ஒருமுறை தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்த்து வைத்தார் என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்கது.