பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி கொலை

பவானியில் ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் முன்னாள் காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2024-06-16 13:20 GMT

கொலை செய்யப்பட்ட சேது வெங்கட்ராமன்.

பவானியில் ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் முன்னாள் காதலன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் சேது வெங்கட்ராமன் (வயது 23). 12ம் வகுப்பு படித்துள்ள இவர் வெல்டிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். பவானி செங்காடு கோட்டை நகரைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் மகன் லோகநாதன் (26). குமாரபாளையத்தில் தள்ளுவண்டி பீசா, பர்கர் கடை வைத்துள்ளார்.

சேது வெங்கட்ராமன் பவானி காமராஜர் நகரைச் சேர்ந்த  19 வயது பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இந்த பெண்ணை லோகநாதன் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவர் கேக் வெட்டிய படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் ஆக லோகநாதன் வைத்திருந்தார். இதைக் கண்ட சேது வெங்கட்ராமன், பவானி அரசு மருத்துவமனை அருகே வருமாறு லோகநாதனிடம் செல்போனில் கூறியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த இருவரும் காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதமாக மாறி, கைகலப்பாக மாறியது.

இதனால், ஆத்திரமடைந்த லோகநாதன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சேது வெங்கட்ராமனை குத்தியுள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் சேது வெங்கட்ராமனை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் சேது வெங்கட்ராமன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பெயரில் பவானி போலீசார் வழக்கு பதிவு லோகநாதனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காதல் தகராறில் இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பவானி நகர பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News