ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.;
ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக ஏற்கெனவே பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்த நிலையில், அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
காஷ்மீரில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 பக்தர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரெசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். இதில் 10 பேர் பலியானதுடன் 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து விசாரணையிலும், பயங்கரவாதிகளை தேடும் பணியிலும் ராணுவத்தினர் ஈடுபட்டனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை கோட்டுக்கு அருகே உள்ள கதுவா மாவட்டத்தில் சுகாய் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.
அதேபோல தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்காலிக முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் பாதுகாப்பு தரப்பில் மொத்தம் 6 பேர் படுகாயமடைந்தனர். ஒரு வீரர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்- இ - முகமது எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இப்படியான தொடர் தாக்குதல் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இதில், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அங்கு மேற்கொள்ளப்படும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடிக்கு ராணுவம் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரின் முழு திறனையும் பயன்படுத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இந்த கூட்டத்தில்,பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அமித்ஷா விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் நிலவும் நிலைமை குறித்து உள்துறை அமைச்சருக்கு முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், அங்கு பாதுகாப்புப் படையினர் வரும் நாட்களில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள் என்றும் ராணுவம் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குனர் தபன் டேகா, சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் அனிஷ் தயாள். சிங், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் ஆர்ஆர் ஸ்வைன் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் ஜூன் 29 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.