/* */

அரசு அதிகாரி வங்கி கணக்கில் 3.39 கோடி பறிமுதல்

அரசு அதிகாரி வங்கி கணக்கில் 3.39 கோடி பறிமுதல்
X

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கி கைதான மாவட்ட நகர, ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் வங்கி கணக்கிலிருந்து 3.39 கோடி ரொக்கம், சுமார் 173 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் ஆனந்த். இவர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகம் கட்டுவதற்குக் கட்டடத் திட்ட அனுமதி பெற முடிவு செய்தார். இதற்காக நாஞ்சிக்கோட்டை சாலையில் கல்லுக்குளம் அருகேயுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு அண்மையில் சென்றார். இந்த அனுமதி கொடுக்க மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குநர் நாகேஸ்வரன்(52) ரூ. 25 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதைக் கொடுக்க விரும்பாத ஆனந்த், தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவுக் காவல் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்துக்கு கடந்த மாதம் 25ம் தேதி மாலை சென்று மறைந்திருந்து, ஆனந்திடமிருந்து ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நாகேஸ்வரனை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். மேலும், திருச்சி காட்டூர் விக்னேஷ்நகரிலுள்ள நாகேஸ்வரன் வீட்டிலும் திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீஸார் சோதனை நடத்தியதில் சுமார் 50 பவுன் நகை, 14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகேஸ்வரனை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்த நாகேஸ்வரனை, நேற்று தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பத்மாவதி, சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர் அவருடைய வங்கி கணக்கு மற்றும் மனைவி ஜாஸ்மின் வங்கி கணக்குகள், லாக்கர்களை திறந்து சோதனை நடத்தினர்.இதில் திருச்சி திருவானைக்காவலில் உள்ள வங்கி ஒன்றில் 1.90 கோடி ரொக்கமும், திருவெறும்பூரில் உள்ள வங்கி ஒன்றில் 37 லட்சம் ரொக்கமும் லாக்கரில் இருந்தது. மேலும் 173 பவுன் தங்க நகைகளும் லாக்கரில் இருந்தது.

மேலும், நாகேஸ்வரன் பெயரில் பத்து வங்கிகளில் 1.12 கோடி ரொக்கம் சேமிப்பு கையிருப்பாக இருந்தது. அதே போல் ரூ.23 லட்சத்துக்கு நிரந்தர வைப்பு தொகைக்கான ஆவணங்கள் இருந்தது. இவற்றை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 13 March 2021 7:06 AM GMT

Related News