வெற்றிச்செல்வன் வெட்டப்பட்ட சம்பவம்: ஆலங்குடியில் பதட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான் கோட்டையைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைரான இவர் ஆலங்குடி பள்ளிவாசல் அருகே உள்ள பிராய்லர் கோழி விற்பனை கடையில் கோழிக்கறி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது கடையில் நின்று கொண்டிருந்தபோது ஆலங்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெற்றிச்செல்வன் முதுகில் வெட்டியுள்ளார். அப்துல் ரகுமான் ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இதனால் ரத்தம் கொட்ட கொட்ட படுகாயமடைந்த அவரை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் கொலை மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அப்துல் ரகுமானின் செயலை கண்டித்து அவரை கைது செய்ய கோரி வெற்றிச்செல்வன் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்ட நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது. இந்நிலையில் அரிவாளால் வெட்டிய அப்துல்ரகுமான் ஆலங்குடி - புதுக்கோட்டை சாலையில் உள்ள அம்புலி ஆற்று பாலத்தின் அருகே மர்ம நபர்களால் கற்களாலும் கட்டையால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீஸ் டிஎஸ்பி முத்துராஜா, சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அப்துல்ரகுமானை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் ஆலங்குடி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu

