கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் அறிவுப் பகிர்வு அமர்வு நிகழ்ச்சி

கோவை ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நடந்த அறிவுப்பகிர்வு நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது கல்லூரியின் முதல்வர் முனைவர் பழனியம்மாள் மற்றும் விருந்தினர்கள்.
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுப் பகிர்வு அமர்வு தொடர் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
தொடக்கத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை, என்.எஸ்.எஸ். பிரிவுடன் இணைந்து, கோயம்புத்தூர் பகுதியில் உள்ள மக்களுக்கு குளத்தைச் சுத்தப்படுத்துதல், நீர் ஆதாரத்தை உறுதி செய்தல் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்காக 'கௌசிக நீர் கரங்கள்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்காக அறிவுப் பகிர்வு நிகழ்ச்சிகள் தொடங்கின. தகவல் தொழில்நுட்பத் துறையால் நிர்வகிக்கப்படும் 'ஆர்கானிக் ஃபார்மிங் கிளப்' விவசாயத்தில் தொழில்முனைவு குறித்த ஒரு அமர்வை ஏற்பாடு செய்தது. காஞ்சிபுரம், உழவர்பூமி அக்ரோ ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வெற்றிவேல்,மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.
21ம் தேதி வழக்கறிஞர் சிவராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொழில் மற்றும் கல்வித்துறைக்கான அறிவுசார் சொத்துரிமைகளின் பங்கு என்ற தலைப்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 22ம் தேதி அன்று, பாலக்காடு ஸ்பிரிங்கிள் சொல்யூஷன்ஸ் இயக்குநர் விஷ்ணு பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சைபர் செக்யூரிட்டி குறித்து மாணவர்களுக்கு கருத்துக்களை வழங்கினார். 23 ம் தேதி அன்று, கோயம்புத்தூர் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் மதியழகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஐ.டி.யில் தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்புக்கான தொழில் வழிகாட்டுதலை வழங்கினார். அகம் பயிற்சி வளங்கள், கோவை யதீஷ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மனித பண்புகளின் பகுப்பாய்வு குறித்த அமர்வை வழங்கினார்.
அமர்வுகளின் தொடக்கத்தில், கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் ஸ்ரீஜித் விக்னேஷ், சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பழனியம்மாள் தலைமை வகித்து, வல்லுனர்கள் பகிர்ந்து கொள்ளும் அறிவை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார். மேலும் மாணவ,மாணவிகளுக்கு பயனுள்ள அமர்வுகளை ஏற்பாடு செய்ததற்காக தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாராட்டினார்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் பேராசியர்களான கணேஷ்மூர்த்தி, மாலதி, சதீஷ்குமார் கோபி, தங்கமுத்து, வினோத்,.நித்யா, நவீன்குமார், சந்தியா ஆகியோர் அறிவுப் பகிர்வுத் தொடரின் பல்வேறு அமர்வுகளை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இறுதியாக, இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த கல்லூரியின் முதல்வர், துறைத்தலைவர் மற்றும் அனைத்து பேராசிரியர்களுக்கும் மாணவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu