போலீஸ் குறைதீர்க்கும் கூட்டம் எப்போது? - ஆவலாக காத்திருக்கும் தமிழக போலீசார்

போலீஸ் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இந்த ஆண்டு எப்போது நடக்கும் என மாநிலம் முழுவதும் போலீசார் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Update: 2023-03-17 05:30 GMT

போலீசார் குறைகளை தீர்க்க,  குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது எப்போது? - காத்திருக்கும் போலீசார் (கோப்பு படம்)

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்துவதிலும், மக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதிலும் போலீசார் பங்கு மகத்தானது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. பல ஆயிரம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணியில் உள்ள போலீசார் மிகுந்த பணிச்சுமையிலும் மனஉலைச்சலிலும் சிக்கி தவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில், போலீஸ் துறையில் அரசியல் தலையீடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலீசாரின் குறைகளை தீர்க்க குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த ஆண்டு இந்த கூட்டம் மாநிலம் எங்கும் நடத்தப்பட்டது. இதில் போலீசாரின் பல பிரச்னைகளுக்கு விடிவு பிறந்தது உண்மை தான். ஆனால் இந்த ஆண்டு இதுவரை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை. கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை. எப்படியும் கூட்டம் நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மாநிலம் முழுவதும் போலீசார் மனுக்களை எழுதி கையில் தயாராக வைத்துக் கொண்டு, முதல்வர் அறிவிப்பினை நோக்கி காத்திருக்கின்றனர்.

விரைவில் சட்டசபை கூட்டத்தொடரும் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டும் போலீஸ் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விரைவில் நடத்துவது குறித்த அறிவிப்பினை முதல்வர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் போலீசார் கையில் மனுக்களுடன் காத்திருக்கின்றனர். மக்களை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் போலீசாரின் குறைகளை தீர்க்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் போலீசார் காத்திருக்கின்றனர்.

Similar News