விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

விழுப்புரம் - காட்பாடி இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை நாளை முதல் துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-05-22 13:31 GMT

பைல் படம்.

விழுப்புரம் - காட்பாடி இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை மே 23-ம் தேதி முதல் துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரத்திற்கும், மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கும் முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி புதுச்சேரி மக்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வரும் இந்த ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்ததால் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், விழுப்புரம் - காட்பாடி ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இதனால், விழுப்புரம் - காட்பாடி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்வோர், வணிகர்கள் மற்றும் திருப்பதி பக்தர்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற ரயில்வே நிர்வாகம் தற்போது, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மே 23 திங்கட்கிழமை முதல் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் சேவை தொடங்குகிறது. காலை 5.15 மணிக்கு காட்பாடி சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில், வேலூர் நகரம், கணியம்பாடி, போலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக 9.10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் சென்று சேரும். மறுமார்க்கத்தில், மாலை 07.05 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 11.05 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விரைவு ரயிலில் 7 முன் பதிவு இல்லாத பெட்டி மற்றும் ஒரு கார்டு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில் சேவை, வழக்கம் போல் தொடர்கிறது.

இது குறித்து பயணிகள் கூறும் போது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடி மற்றும் திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த 3 பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்க வேண்டும். பயணிகள் ரயில்களின் சேவையை துண்டித்துவிட்டு, விரைவு ரயிலாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த ரயில் கால அட்டவணைப்படி ரயிலை இயக்க வேண்டும். அப்போதுதான் ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். 3 பயணிகள் ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே அமைச்சகத்துக்கு தமிழக அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்  என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News