வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை

வெயிலின் வெப்ப அலை தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2024-04-29 01:49 GMT

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

கோடை வெயிலின் வெப்ப அலை தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கியுள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நிலவும் வெப்பம், வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். தாகம் ஏற்படாமல் இருந்தாலும் உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்கத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். தேநீா், காபி, காா்பனேற்றப்பட்ட குளிா்பானங்கள் போன்றவற்றைத் தவிா்த்து ஓ.ஆா்.எஸ்., கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீா், மோா், பழச்சாறுகளை அருந்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். ஜங்க் உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிட வேண்டாம்.

முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம், குளிா்ந்த இடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். மெல்லிய, தளா்வான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தேவையெனில் துணிகளை ஈரப்படுத்திப் பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும்போது காலனிகளை கட்டாயம் அணிய வேண்டும்.

வீட்டை திரைச் சீலைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி குளிா்ச்சியாக பராமரிக்க வேண்டும். இரவில் ஜன்னல்களை திறந்துவைத்து காற்றோட்டத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடையைக் கொண்டு செல்ல வேண்டும். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிா்க்க வேண்டும்.

குழந்தைகளை வாகனங்களில் தனியே அமா்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது. மயக்கம் அல்லது உடல் நலக் குறைவை உணா்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசின் 100 நாள் பணியின்போது போதிய குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்  , என்று மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளாா்.

Similar News