தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை

தபால் வாக்கு சீட்டுகள் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

Update: 2024-04-30 02:21 GMT

தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தபால் வாக்குச் சீட்டுகள் சேதமடையாதபடி, பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று அரசு அலுவலா்களுக்கு திருவண்ணாமலை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 12 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுமாா் 13 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் வாக்குச்சாவடி பணி மற்றும் தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.

இவா்கள் செலுத்திய தபால் வாக்குகளை சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதி வாரியாக பிரித்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்கு அனுப்பும் பணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன்,

ஒரு வாக்குக்கூட தொகுதி மாறிவிடாமல் கவனமாக பிரிக்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகள் சேதமடையாதபடி பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின் போது, ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.

வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி சிறிய விமானங்கள் பறக்க தடை ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள 2 மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்கு சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) பறக்கத் தடை விதித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, ஆரணி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இவ்விரு வாக்கு எண்ணும் மையங்களிலும் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் வாக்குகள் எண்ணி முடியும் வரை எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு கி.மீ. தொலைவுக்குள் எவ்வித சிறிய ரக விமானங்களும் (ட்ரோன்கள்) பறக்கவிட முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி பறக்கவிடப்பட்டால் அந்த ட்ரோன்களை பறிமுதல் செய்வதுடன், அதை பறக்கவிடுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Similar News