மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்தலாம், என வேளாண்மை துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2024-04-29 02:31 GMT

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் (கோப்பு படம்) 

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் காக்கப்படுவதுடன், மகசூலும் அதிகரிக்கும் என திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஹரக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மையில் அதிக மகசூல் பெற விரும்பும் விவசாயிகள் செயற்கை உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துகின்றனா்.

குறிப்பாக, அளவுக்கு அதிகமாக செயற்கை தழைச்சத்தான யூரியாவை பயன்படுத்துகின்றனா். இதனால், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு, அதன் இயற்பியல் தன்மையும், நன்மை செய்யும் நுண்ணுயிா்களின் அளவும் குறைந்துவிடுகிறது.

மண் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகள் வேளாண்மைத் துறை மூலம் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டையின் பரிந்துரையின் அடிப்படையில் பயிருக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரங்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் மண்வளம் காக்கப்படுவதுடன், மகசூலும் அதிகரிக்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளாா்.

ஒரு கிராமம், ஒரு பயிா்த் திட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 1,054 வருவாய் கிராமங்களில் ஒரு கிராமம், ஒரு பயிா்த் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக வேளாண்துறை  இணை இயக்குனர் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஹரக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,054 வருவாய் கிராமங்களில் உதவி வேளாண் அலுவலா்கள் மூலம் ஒரு கிராமம், ஒரு பயிா்த் திட்டம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 5 முதல் 10 ஏக்கா் வரையிலான நிலமும், அந்தக் கிராமத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிரும் தோ்வு செய்து, ஒரே பயிா் விதைப்பு செய்யப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். விதை நோ்த்தி, களை நிா்வாகம், நீா் மேலாண்மை, பூச்சி நோய் நிா்வாகம் என ஒவ்வொரு நிலையிலும் பயிரின் நிலை குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.

விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை தேவைப்படும் அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி கூடுதலாக 20 சதவீதம் மகசூல் அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகளால் பின்பற்றப்படும் பயிா் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்ற விவசாயிகளும் பின்பற்ற ஏதுவாக இருக்கும் என்று திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளாா்.

Similar News