கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று துர்கையம்மன் உற்சவம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 3நாள் எல்லை தெய்வ வழிபாடு இன்று தொடங்குகிறது.

Update: 2022-11-24 00:51 GMT

மின்னொளியில் ஜொலித்த கோயிலின் ஒன்பது கோபுரங்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 6ம் தேதி 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாட வீதியில் சுவாமி விதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.

அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவிலான பக்தர்களே தீபத்திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதால் இந்தாண்டு தீபத்திருவிழாவை காண சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டு 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி இன்று இரவு துர்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

இரவு 8மணியளவில் சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ஒன்பது கோபுரங்கள் மற்றும் மதில் சுவர்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. 

Tags:    

Similar News