திருவண்ணாமலை: தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் நடவடிக்கை

திருவண்ணாமலை தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டால் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஆட்சியர் முருகேஷ் கூறி உள்ளார்.

Update: 2022-08-14 01:30 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பைல் படம்)

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுதந்திர தின விழாவில் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சினைகளோ, தேசிய கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டு உள்ளது.

1989-ம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் பிரிவின் படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலக பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடமால் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

மேலும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டப் பிரிவின் படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாது எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்துதலும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (திங்கள்கிழமை) நடைபெற உள்ள 75-வது சுதந்திர தின அமுத பெரு விழாவில் எவ்வித சாதிய பாகுபாடியின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்திட மாவட்ட நிாவாகத்தால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களிலும் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்திட விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இவற்றினை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ள மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையினை 04175- 2333444, 233345 மற்றும் 93454 78828 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News