நிதி நிறுவன மோசடி; காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முகவர்கள்

திருவண்ணாமலையில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி முகவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-31 01:59 GMT

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட  முகவர்கள்

திருவண்ணாமலை வேங்கிக்காலில் 'ஸ்டார் பவுன்டேஷன்' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் சீட்டு நடத்தி பணம் பெற்று வந்தனர். நிறுவனத்தில் அதிகப்படியான மக்களை சேர்ப்பதற்காக அழகுகலை பயிற்சி, தையல் பயிற்சி, உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தி பெண்களிடம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவற்கான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

மேலும் பலரை பல்வேறு மாவட்டங்களில் ஒருங்கிணைப்பாளர்களாகவும், முகவர்களாகவும் நியமித்து பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். ரூ.50 முதல் ரூ.300 வரை செலுத்தினால் தங்கமூக்குத்தி, அதற்கு மேல் செலுத்தினால் சேலை, ஆடுகள் போன்றவை வழங்குதல் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தினர்.

முகவர்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெற்றனர். முகவர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களை இத்திட்டத்தில் சேர்த்து பணத்தை பெற்றனர்.

திடீரென நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நிர்வாகி தலைமறைவாகி விட்டார். இதனால் பணத்தை கொடுத்த பொதுமக்களும், வாங்கிக்கொடுத்த முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தை செலுத்திய பொதுமக்கள் முகவர்களிடம் பணத்தை கேட்டு நெருக்கடி மற்றும் பிரச்சினை கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ளதாக முகவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முகவர்கள் நிறுவன உரிமையாளர் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்ய தாலுகா போலீஸ் நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்தினர்.

இதையடுத்து நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண் ஆகியோர் கிரிவலப்பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு நேற்று வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முகவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது முகவர்கள் அனைவரும், நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் உறவுக்கார பெண்ணிடம் பணத்தை கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருவரையும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே இழுத்து முகவர்கள் அனைவரும் அவர்களை முற்றுகையிட்டு பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை தாக்கவும் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முகவர்கள் போலீசாரிடம் கூறுகையில், நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.120 கோடி வரை பணத்தை ஏமாற்றி உள்ளனர். தமிழகம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நிறுவன உரிமையாளரின் மனைவி மூலம் தலைமறைவாக உள்ள உரிமையாளரை திருவண்ணாமலைக்கு வரவழைத்து பணத்தை பெற்று கொடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது எனவே கலைந்து செல்லுங்கள் , என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டதின் பேரில் முகவர்கள் கலைந்து சென்றனர். விரைவாக தீர்வு காண பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் முகவரிகள் கோரிக்கை வைத்தனர்.

Similar News