திருவண்ணாமலை பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில் தள்ளு முள்ளு

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Update: 2021-09-22 14:27 GMT

பட்டா மாறுதலுக்கு காத்திருந்த மக்கள் 

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.  தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டா மாறுதல் உள்ளிட்ட பல பணிகள் தடைபட்டிருந்தன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டா மாறுதல் முகாம் இன்று நடைபெறும் என ஆட்சியர் முருகேஷ் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து, பட்டா மாற்றம் செய்வதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனுக்களுடன் வரிசையில் காத்திருந்தனர் .  

நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள், ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொரோனா பரவல் சூழ்நிலையில், பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொண்டது தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாவட்டம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் வருகை தந்ததால் கூட்டம் அதிகமானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து  தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

நாளையும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல் உள்ளிட் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  பொதுமக்கள் தாங்கள் சார்ந்துள்ள பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அதிகாரிகளை தொடர்புகொண்டு சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News