வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக சினிமா பாணியில் பல லட்சம் மோசடி

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல்செய்தனர்.

Update: 2023-03-28 01:34 GMT

பைல் படம்

திருவண்ணாமலை நகரம் காந்தி நகர் புறவழி வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர், பிரேம்குமார். இவர் பல்வேறு மாவட்டங்களில் படித்த இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் , சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை பணத்தைப்பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வரும் பிரேம் குமார் தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏஜென்ட்கள் மூலம் தங்கும் விடுதியில் அறை எடுத்து படித்த, வேலையில்லாத ஏழை எளிய இளைஞர்களைக் குறி வைத்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், கத்தார், மாலத்தீவு உள்ளிட்ட வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.

வெளிநாட்டில் வேலை என்றவுடன் படித்த இளைஞர்கள் கந்துவட்டிக்கு கடன்பெற்று சுமார் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை 150 இளைஞர்கள் பிரேம் குமாரிடம் பணத்தைக் கட்டி உள்ளனர். பணத்தைக் கட்டிய இளைஞர்கள், எப்போது வெளிநாட்டிற்கு அனுப்புவீர்கள என பிரேம் குமாரிடம் கேட்டு வந்துள்ளனர்.

அதற்கு பிரேம் குமார் முறையாகப் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பலமுறை பிரேம் குமாரிடம் பணத்தைக் கட்டிய இளைஞர்கள், பணத்தையாவது திருப்பிக் கொடுக்குமாறு தொடர்ந்து கேட்டுள்ளனர்.

மேலும் அவர் பணம் வாங்கி சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும் வேலை வாங்கி தராமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.நேற்று வேட்டவலம் புறவழிச்சாலையில் உள்ள கார் உதிரிபாக கடை நடத்தி வரும் பிரேம் குமாரிடம் பணத்தை திருப்பித் தருமாறு பணம் கட்டிய இளைஞர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு பிரேம் குமார் உரிய பதிலளிக்காமல்  அடியாட்களை வரவழைத்து பணத்தைக் கட்டி ஏமாந்த இளைஞர்களை மிரட்டி அனுப்பி  உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேட்டவலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இளைஞர்கள் கடன் பெற்று வெளிநாட்டிற்குச் சென்று பணிபுரிவோம் என்ற நம்பிக்கையில் பணத்தை கட்டியதாகவும், தாங்கள் கட்டிய பணத்திற்கு பிரேம் குமார் புரோ நோட் என்று சொல்லக்கூடிய, பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டு அளித்தார் எனவும், தாங்கள் கட்டிய பணத்தை பிரேம் குமாரிடமிருந்து பெற்றுத் தர வேண்டுமென பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டதால் போலீசார் பணத்தை ஏமாற்றியதாக கூறப்பட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக எங்களிடம் திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஒருவர் ஏமாற்றி விட்டார். அவரிடம் பணத்தை கொடுத்து நாங்கள் ஏமாந்து உள்ளோம். பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே அவரிடம் இருந்து எங்கள் பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என  அதில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News