நடுப்பகுதியிலிருந்து பூத்து காய்த்துள்ள வாழை மரம்

இயற்கையாக வாழை மரத்தின் நுனிப்பகுதியில் இருந்து வாழைத்தார் பூத்து காய்க்கும். ஆனால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இயற்கைக்கு மாறாக வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருந்து வாழைத்தார் பூத்து காய்த்தது அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது.

Update: 2020-12-29 12:56 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை சாலையில் பெரியக்காநகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயா. இவரது கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிடவே இவர் கூலி வேலைக்குச் சென்று தனது குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜயா ஒரு நாள் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது சாலையோரம் யாருக்கும் வேண்டாம் என தூக்கி எறியப்பட்ட நிலையில் வாழை கன்று ஒன்று கிடந்தது.

சாலையோரம் கிடந்த அந்த வாழைத் கன்றை எடுத்து வந்து தனது வீட்டின் முன்பு உள்ள தோட்டத்தில் நட்டு வைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நன்றாக வளர்ந்து வந்த வாழைமரம் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வாழையில் நடுப்பகுதியிலிருந்து குலை தள்ளியுள்ளது. இயற்கையில் வாழை மரத்தின் நுனிப்பகுதியில் வாழைத்தார் வருவது வழக்கம். ஆனால் இயற்கைக்கு மாறாக வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருந்து வாழைத்தார் வந்திருப்பது விஜயாவிற்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகவலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாழை மரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைத் தார் வந்திருப்பதைப்பார்த்து அதிசய வாழைத்தார் என்று கூறி வருகின்றனர்.

இத்தகவல் பரவவே வாழைத்தாரை காண்பதற்காக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் சாலையோரத்தில் அனாதையாய் கிடந்த வாழைக்கன்று ஒன்றை எடுத்துவந்து தனது வீட்டின் முன்பு உள்ள தோட்டத்தில் நட்டு வைத்து அதில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக விஜயா கூறுகிறார்.

Similar News