பயணிகள் நெரிசலில் திணறிய பஸ்; தேனி ஆட்சியர் 'டென்ஷன்'

கொரோனா விதிமுறை பின்பற்றாமல் தனியார் பஸ்சில் 120 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணித்ததால், தேனி ஆட்சியர் பதற்றமடைந்தார்.

Update: 2021-08-05 10:45 GMT

அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த பேருந்தை நிறுத்திய தேனி ஆட்சியர்.

தேனி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்க தேனி ஆட்சியர் முரளிதரன் மயிலாடும்பாறை மலைக்கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வீடு தேடிச் செல்லும் மருத்துவ வேனை தொடங்கி வைத்தார். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்து கலெக்டர் திரும்பும் போது, வருஷநாட்டில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை கவனித்தார். அப்போது பயணிகள் நெரிசலில் சிக்கி பேருந்து திணறி வந்தது.

உடனே தனது காரில் இருந்து இறங்கிய ஆட்சியர் முரளிதரன், பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்தார். டிரைவர், நடத்துனர் உட்பட யாரும் முககவசம் அணியவில்லை. பயணிகளில் 95 சதவீதம் பேர் முகக்கவசம் அணியவில்லை. 40 பேர் மட்டுமே அதிகபட்சம் பயணிக்கலாம் என்ற விதிகளை மீறி, 120க்கும் மேற்பட்ட பயணிகள் மிக நெருக்கமாக பயணித்தனர்.

அங்கேயே பேருந்தை நிறுத்தி அபராதம் விதித்தார். பஸ் அனுமதியை ரத்து செய்யப்போவதாக எச்சரித்தார். பயணிகள் இறங்கி 'ஐயா எங்களுக்கு கூடுதல் பஸ் வசதி கிடைத்தால் நாங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறோம்' என்றனர். கூடுதல் பஸ் விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த ஆட்சியர் மக்களிடம், "நாம் கொரோனா தொற்று மூன்றாவது அலையின் விளிம்பில் நிற்கிறோம். மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளி, முககவசம் அணிதல், கைகளை சுத்தம் செய்தல் போன்றி பணிகளை தெளிவுடன் கடைபிடிக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

மக்களுக்கு ரோட்டில் வைத்தே கொரோனா விழிப்புணர்வு நடத்தினார். டிரைவர், கண்டக்டர்களை எச்சரித்து அளவான பயணிகளை மட்டும் ஏற்றி அனுப்பி வைத்து, கூடுதல் பயணிகளுக்கு வேறு பஸ் வசதிகளை செய்து கொடுத்தார். மக்கள் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டனர். பஸ்சும் அபராதம் இன்றி தப்பியது.

Tags:    

Similar News