காய்கறிகளில் என்ன சத்துகள்? தேனி உழவர்சந்தை விளக்கம்
நீங்கள் வாங்கும் காய்கறிகளி்ல் என்ன சத்துகள் உள்ளன என்ற விவரத்தை தேனி உழவர்சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள உழவர்சந்தைகளில் தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம் உழவர்சந்தைகள் முன்னணியில் உள்ளன. ஒவ்வொரு உழவர்சந்தையிலும் தினமும் சராசரியாக 40 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன.
அதாவது சந்தைக்கு உள்ளே கடை வைத்திருக்கும் விவசாயிகளின் விற்பனை, சந்தை வாசலில் கடை வைத்திருக்கும் விவசாயிகளின் விற்பனை இரண்டும் சேர்ந்து தான் இந்த கணக்கு. சந்தை வாசலில் கடை போட அனுமதித்ததும் உழவர்சந்தை நிர்வாகம் தானே. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களுக்கு கமிஷன் கொடுக்காமல் விற்க வேண்டும் என்பதற்காக தானே அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.
சந்தைக்கு உள்ளே குறிப்பிட்ட சில எண்ணிக்கையில் மட்டும் தான் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்க முடியும். மீதம் விவசாயிகள் வாசலில் கடை போடட்டும். அவர்களும் நன்றாக வாழட்டும் இதற்காக தானே முதல்வர் இந்த திட்டத்தை நேரடியாக தொடங்கி வைத்தார் என்ற உழவர்சந்தை நிர்வாகிகளின் கணக்கும் மிகவும் சரியானது தான்.
இப்போது காய்கறிகள் வாங்கும் மக்கள் தாங்கும் வாங்கும் காய்கறிகளில் என்ன சத்துகள் உள்ளன என்பதை மக்கள் தெரிந்து கொண்டு வாங்கட்டும் என சந்தை வளாகத்திற்குள் காய்கறிகளின் பெயர்கள், அதில் உள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் குறித்து விளக்கமாக போர்டு வைத்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் மவுசு அதிகரித்துள்ளது.
இது குறித்து தேனி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் தெய்வம் கூறியதாவது: கத்தரிக்காயில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளன. இந்த காய் நரம்புகளுக்கு வலுவூட்டும், கணையத்தின் செயல்பாட்டினை அதிகரிக்கும், தோல் பளபளப்பினை அதிகரிக்கும். கல்லீரல் கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.
தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது. வெண்டைக்காயில் தாது உப்புக்கள், பெக்ஷன் என்ற சத்துப்பொருள் உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. இதயத்துடிப்பினை சீராக்கும். உடல் எடையினை குறைக்க உதவும். மூளையின் செயல்பாட்டினை துாண்டி அறிவுத்திறனை அதிகரிக்கும். பீட்ரூட்டில் தாது உப்புகள் அதிகம் உள்ளன. கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவிப்பதிலும், கல்லீரை சுத்தப்படுத்துவதிலும், கல்லீரல் மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையினை நீக்குவதிலும் பீட்ரூட் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. இப்படி ஒவ்வொரு காய்கறிகளிலும் பல்வேறு சத்துக்கள், நன்மைகள் உள்ளன. அத்தனையும் போர்டில் எழுதி வைக்க முடியாது. எனவே சில காய்கறிகளின் பட்டியலை மட்டும் எழுதி வைத்துள்ளோம். மக்கள் ஆர்வமுடன் தெரிந்து கொண்டு காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். மொத்தம் சந்தையில் தினசரி சராசரியாக 68 காய்கறிகள் விற்கப்படுகின்றன. பழங்கள், கீரைகள் விற்கப்படுகின்றன. அத்தனை காய்கறிகளின் சத்துக்கள், உடலுக்கு தரும் நன்மைகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என மக்கள் எங்களிடம் வந்து கேட்கின்றனர். இதனை நாங்கள் எங்கள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் புத்தகம் வர வாய்ப்புள்ளது என்றார்.