நாமகிரிப்பேட்டையில் உலக மண் தின கருத்தரங்கு; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
Namakkal news- ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உலக மண் தினம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.;
Namakkal news, Namakkal news today- ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சி வேளாண்மை விரிவாக்க மையத்தில் உலக மண் தினம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
மண் வளம் குறித்து, விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிச.5ம் தேதி உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டு, சர்வதேச அளவில் மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மண்வளம் பாதுகாத்தல், மண்ணின் சத்துக்களை அறிந்து கொண்டு சமச்சீராக உரமிடுதல், ராசயண உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் காற்று மண் மாசுபடுதலை தடுத்தல், இயற்கை மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்ததுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பெற்று பரிந்துரைக்கேற்ப உர அளவை பயன்படுத்த வேண்டும். உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், அங்கக உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவற்றை பரிந்துரைக்கேற்ப பயன்படுத்தி ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினை கடைபிடிப்பதன் மூலம் சாகுபடி செலவை குறைக்க முடியும். விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண் வளத்தினை எளிதாக அறியும் வகையில் ‘தமிழ் மண்வளம்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு அதில் அனைத்து விவசாயிகளின் சர்வே எண் வாரியாக மண்ணில் உள்ள சத்துக்களின் விபரம், அடுத்து பயிரிடப்படவுள்ள பயிருக்கான உரப்பரிந்துரை போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை விவசாயிகள் செல்போன் மூலமாகவே உழவன் செயலி மூலம் மண்வள அட்டையாக பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணம்பாளையத்தில் நடமாடும் பரிசோதனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டதில் இதுவரை 17,278 மண் மாதிரிகள் மற்றும் 2,730 நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு மையம் அமைக்க மகிழம் விவசாய குழுவிற்கு ரூ1 லட்சம் மதிப்பில் நிதியுதவி, 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4,000 மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள், 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டன.
வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி, உதவி இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.