ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கம்
ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கம் நடைபெற்றது. இதனை ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.;
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராசிபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், ராசிபுரம், கன்னட சைனிகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாம் துவக்க விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:-
தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கடந்த 23ம் தேதி நாமக்கல் மற்றும் குமாரபாளையம் நகராட்சியில் நடைபெற்றது. தொடர்ந்து ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 3 நகராட்சியில் பணிபுரியும், தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது.
ராசிபுரம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 34 மற்றும் பெண்கள் 40 ஆக மொத்தம் 74 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 32 மற்றும் பெண்கள் 61 ஆக மொத்தம் 93 பணியாளர்களும் சேர்த்து, மொத்தம் 167 தூய்மை பணியாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இருதய மருத்துவம், நுரையீரல், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹூமோகிளோபின், ரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு மருத்துவ குழுவினரால் ஆசோசனைகள் வழங்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம். பி. தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர், 14-வது வார்டு உறுப்பினர் விநயாக மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் (பொ) சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.