ராசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்: மனுக்களை பெற்ற அமைச்சர்

ராசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.;

Update: 2023-12-18 11:19 GMT

ராசிபுரத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்.

ராசிபுரம் நகரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தினை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு நேரடியாக சென்று சேரவேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே அதிகாரிகள் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, ஒரு மாதத்தில் தீர்வுகாண வேண்டும் என்பதற்காக மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, இத்திட்டத்தை கோவையில்  துவக்கி வைத்தார்.

ராசிபுரம் நகராட்சி, ஸ்ரீ குமரவேல் திருமண மண்டபத்தில், இன்று, முதல் கட்டமாக, நகராட்சி வார்டு எண்: 10, 11, 13, 24, 25, 26, 27 ஆகிய பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் துவக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். லோக்சபா எம்.பி. சின்ராஜ் முன்னிலை வகித்தார். முகாமில், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு, மக்களுக்கு பொறுப்புணர்வுடன் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஏராளமான அரசு சேவைகள் அரசு அலுவலகங்களை நாடிச்சென்று பெறுவதை தவிர்த்து, பொதுமக்களின் வீடுகளில்  இருந்தே இணைய வழி மூலமாகவே விண்ணப்பிக்கும் வகையில், பல்வேறு சேவைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளிம்பு நிலை மக்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத மக்கள், சேவைகளுக்கான இணைக்கப்பட வேண்டிய சான்றாவணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு சேவைகளை எளிதாக்கி அவர்களின் இருப்பிடத்திற்கே எடுத்துச் சென்று குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கிடும் வகையில் மக்களுடன் முதல்வர்  திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டம் இன்று (18.12.2023) துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் 29.12.2023 வரை 9 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) 5 நகராட்சி, 18 பேரூராட்சிகள் ஆகிய இடங்களில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி தலைவர் கவிதா சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News