குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, ஒரு வாரத்தில் ரேஷன்கார்டு, இன்சூரன்ஸ் அட்டை வழங்கல்..!

குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக, விண்ணப்பித்த ஒரு வாரத்தில் ரேஷன்கார்டு, இன்சூரன்ஸ் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-17 09:45 GMT

நாமக்கல் :

குழந்தையின் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு வசதியாக, மனு அளித்த ஒரு வாரத்துக்குள் ரேஷன் கார்டு மற்றும் முதல்வரின் இன்சூரன்ஸ் அட்டையை, நாமக்கல் கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், அக்ரஹாரம் லக்கபுரம் போயர் தெருவை சேர்ந்தவர் நதியா, மோகன்ராஜ் தம்பதியரின், 1 வயது குழந்தை நிலிக்ஷா இருதய கோளாறால் பாதிக்கப்பட்டார். குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். போதிய பண வசதி இல்லாததால், இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள, புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை பெற்றுத்தர வேண்டி, கடந்த 8 ம் தேதி, அவர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அதன் அடிப்படையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனரிடம் சிறப்பு அனுமதி பெற்று, கடந்த, 15ம் தேதி அவருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக, கலெக்டரின் விரைவான நடவடிக்கையால், தற்போது, முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை பெறப்பட்டு, நதியா - மோகன்ராஜ் தம்பதியரிடம், கலெக்டர் உமா வழங்கினார்.

‘மனு அளித்த ஒரு வாரத்திற்குள், எங்களது குழந்தையின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏதுவாக, உடனடியாக நடவடிக்கை எடுத்து, புதிய ரேஷன் கார்டு மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் அட்டை வழங்கிய தமிழக முதல்வர், நாமக்கல் கலெக்டர் ஆகியோருக்கு நன்றி’ என, நதியா மற்றும் அவரது கணவர் மோகன்ராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News