குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்

குமாரபாளையம் காவேரி நகரில் வடிகால் அடைப்பு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-05-17 10:47 GMT

குமாரபாளையம் காவேரி நகர் வடிகால் அடைப்பு, குப்பைகள் எடுக்காமல் இருந்தமைக்காக பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் எடப்பாடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட பகுதியாகும். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.


இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதிகளான அய்யம்பாளையம் கிழக்கு காவிரி நகர் சில்வர் டோன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் பிரித்து வைக்கப்பட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பெற, தூய்மை பணியாளர்கள் வராததால் குப்பைகள் அதிகமாக தேங்கியுள்ளன. மேலும் சாக்கடை கால்வாயில் தற்பொழுது கோடை மழை தொடங்கியுள்ள நிலையில் சாக்கடை கால்வாய் மழை நீர் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன. இதனால் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாக்கடை கால்வாய்களை தூர்வாரவும் குப்பைகளை பெற்றுச் செல்லவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News