கோழிப்பண்ணையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விபரங்களை வெப்சைட்டில் பதிவு செய்ய அறிவிப்பு

கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை தொழிலாளர் துறை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-03-17 02:50 GMT

பைல் படம் 

நாமக்கல்,

கோழிப்பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை தொழிலாளர் துறை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்களது பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளில் பணிபுரியும், பணியமர்த்தப்படும் வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை (ஆதார் எண், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்வதில்லை. இதனால் அத்தொழிலாளர்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடிவதில்லை மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் தடை ஏற்படுகிறது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தங்களது பண்ணைகளில் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் போது அவர்களது அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டு பணியமர்த்த வேண்டும். மேலும், அந்த விபரங்களை, ஒரு மாதத்திற்குள், லேபர்.டிஎன்.ஜிஓவி.இன்/ஐஎஸ்எம் என்ற தொழிலாளர் துறை வெப்சைட்டில் அப்லோட் செய்ய வேண்டும். பதிவு செய்யாத உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை வெப்சைட்டில் பதிவு செய்த விவரத்தை நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். தொழிலாளர்களது விவரங்கள் அப்லோடு செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதுதொடர்பாக தொழிலாளர் துறை அலுவலர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாமக்கல், பரமத்தி வேலூர், மோகனூர் தாலுக்காவைச் சேர்ந்தவர்கள் 88380-40453 என்ற எண்ணில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆய்வாளரையும், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம் தாலுக்காவைச் சேர்ந்தவர்கள் 90424-88228 என்ற எண்ணில் ராசிபுரம் தொழிலாளர் உதவி ஆய்வாளரையும் அணுகலாம்.

இதுபோல் திருச்செங்கோடு தாலுக்காவைச் சேர்ந்தவர்கள் 94442-22461 எண்ணில் திருச்செங்கோடு தொழிலாளர் உதவி ஆய்வாளரையும், குமாரபாளையம் மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுக்காவைச் சேர்ந்தவர்கள் 88836-33363 என்ற எண்ணில் சங்ககிரி தொழிலாளர் உதவி ஆய்வாளரையும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News