மகளிா் குழுக்கள் மற்றும் விவசாயிகளின் இயற்கை சந்தை
ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை விவசாயப் பொருட்கள், 80-க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினர் பங்கேற்பு;
ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் குழுக்களின் இயற்கை சந்தை அரங்கேற்றம்
ஈரோடு பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை சந்தை சனிக்கிழமை தொடங்கியது. இதில் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள் தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 80-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் மற்றும் விவசாயிகள் பங்கேற்று, தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், அரிசி, வேர்க்கடலை, எள், நாட்டுச் சர்க்கரை, மஞ்சள் தூள், காளான், தேன் போன்றவை அடங்கும்.
மேலும், மகளிர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட புடவை, படுக்கை விரிப்பு, துண்டு, பல்வேறு வகையிலான பைகள், ஆடைகள், கூடைகள், வீட்டு உபயோகத்துக்கான அரிவாள், அரிவாள்முனை, கத்தி, தோசைக் கல், சப்பாத்தி கருவி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலைய வளாகம் என்பதால் ஏராளமான பயணிகள் இவற்றை வாங்கியும், பார்வையிட்டும் சென்றனர்.
கூடுதல் ஆட்சியர் அர்பித் ஜெயின், மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ் ஆகியோர் நுகர்வோரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தனர். மாவட்ட வள பயிற்றுநர்கள் பி. கவிதமலர், எம். சரண்யா, உதவி திட்ட அலுவலர் ஜான்லிங்டன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இயற்கை சந்தை மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை நடைபெறும்.