அந்தியூரில் பணி மந்தமாக நடைபெறும் சிறுபாலம் கட்டும் பணி
அந்தியூரில் சிறுபாலம் கட்டும் பணியில் மந்தம், பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம்;
தவிட்டுப்பாளையத்தில் மந்தமான சிறுபாலம் பணியால் போக்குவரத்து நெருக்கடி
அந்தியூரிலிருந்து அத்தாணி செல்லும் பிரதான சாலையில் தவிட்டுப்பாளையம் பாலம் அருகில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்தச் சிக்கலைக் களைய தேங்கும் மழைநீரை வெளியேற்ற வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
சாலையின் ஒரு பகுதியில் பணி நிறைவடைந்துள்ள நிலையில், மற்றொரு பகுதியில் ஒரு மாதமாக வேலை நடந்து வருகிறது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் சிறுபாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களிலும், சந்தை நாளான திங்கட்கிழமைகளிலும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
பணி மந்தமாக நடைபெறுவதால் வயதானவர்களும், பள்ளி மாணவர்களும் இப்பகுதியைக் கடக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிறுபாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.