தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழகத்தில் உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-03-15 12:00 GMT

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன். (கோப்பு படம்).

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள். பாலை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகரத்துக் கொண்டே வருகிறது. மாட்டு தீவனத்தில் இருந்து அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. பாலுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால், பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானம் காலத்திற்கு ஏற்ப மாறவில்லை.

அதனால் விலை அதிகம் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் சமீப காலமாக பாலை விற்பனை செய்கிறார்கள். தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு கொடுப்பதை பால் உற்பத்தியாளர்கள் தவிர்க்கின்றனர். தினசரி 38 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது 25 லட்சம் லிட்டர் ஆக குறைந்திருக்கிறது.

அதனால் ஆவின் நிறுவனம் சில நாட்களாக மாநிலத்தின் பல இடங்களில், தேவையான அளவு பால் விநியோகம் செய்ய முடியாமல் தடுமாறுகிறது. கோடை காலம் துவங்கியுள்ளதால், பால் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்கின்ற விலையை விட லிட்டருக்கு ரூ. 10 க்கும் மேல் கூடுதலாக தனியார் பால் நிறுவனங்கள் வழங்குகின்றனர்.

ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற விலையை விட பாலின் விட உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு, பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுப்பதன் மூலமாகத்தான் ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகப்படுத்த முடியும். வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு போடுவதன் மூலமாக உற்பத்தியாளர்களை தனியாருக்கு பால் விற்பனை செய்வதை தடுக்க முடியாது.

எனவே, தாமதப்படுத்தாமல் உடனடியாக பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை அழைத்து, தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட, தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து, ஆவின் நிறுவனத்தையும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என ஈஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News