வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணி பெண் போலீஸ் ஏட்டு சாலை விபத்தில் உயிரிழப்பு

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணி முடிந்து திரும்பிய பெண் போலீஸ் ஏட்டு சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Update: 2024-05-02 06:54 GMT

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணி முடித்து வீடு திரும்பியபோது, சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் உமா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வீடு திரும்பும்போது சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீஸ் ஏட்டுவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், நாமகிரிப்பேட்டை காவல்நிலைய பெண் போலீஸ் ஏட்டு அமுதா காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். மே 1ம் தேதி இரவு, பணி முடிந்து டூ வீலரில் வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, பெண் போலீஸ் ஏட்டு அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பிரசோதனை முடிவடைந்ததும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பெண் போலீஸ் ஏட்டு அமுதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் மெட்டாலாவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்துபோன அமுதா விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் மிக்கவர், துடிப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடியவர். அவரது இறப்பு காவல்துறைக்கு பேரிழப்பாகும். நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே, தேர்தல் பணியில் ஈடுபட்டு வீடு திரும்பும்போது, சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஜெயபாலனின் குடும்பத்தினருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவின் மூலம் ரூ. 15 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று உயிரிழந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதாவின் குடும்பத்திற்கும் கருணைத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான முன்மொழிவுகள் தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்றைய தினமே அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியர் உமா கூறினார்.

Tags:    

Similar News