சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி எச்சரிக்கை

சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு, கவனமாக செயல்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-05-02 01:30 GMT

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு, கவனமாக செயல்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தற்போது பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்துவிடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்க வேண்டும்;

கல்வி உதவித்தொகை மோசடி (Scholarship Fraud):: பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு கல்வித் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி உங்களுடைய மகன், மகள் படிக்கும் பள்ளி பெயரைச் சொல்லி, கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி உங்களது வங்கி விவரங்களை கேட்டால் கொடுத்து ஏமாறக் கூடாது. உங்களது வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை பணம் வரும் என்று கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம்.

முதலீடு மோசடி (Investment Fraud): உங்கள் பகுதியில் உள்ள தெரிந்த நபர்கள் அல்லது உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பிரபல நிறுவனங்களின் பெயரில் உள்ள போலியான செல்போன் அப்ளிகேஷன்களை (Android APP) அறிமுகப்படுத்தி, அதில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் மற்றும் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி பணம் முதலீடு செய்ய சொல்லி பரிந்துரை செய்தால் அதை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.

மிரட்டல் மோசடி (Threatening Call Fraud): உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பள்ளி, கல்லூரியில் படிக்கும் உங்கள் மகன், மகளை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்வதாகவோ, அல்லது கடத்திவிட்டதாகவோ கூறி உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினால், உங்களது மகன், மகளை உடனே தொடர்பு கொண்டு அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பணம் ஏதும் அனுப்பி ஏமாற வேண்டாம்.

போதை மருந்து கடத்தல் மோசடி (Fake Drug Parcel Fraud): செல்போனிலோ அல்லது வாட்ஸ் அப் கால் மூலமாகவோ உங்களை தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள், தாங்கள் மும்பை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகள் என்றோ அல்லது சிபிஐ அதிகாரிகள் என்றோ அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டுள்ளதாகவோ அல்லது உங்களது வங்கி கணக்கில் முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவோ கூறி வீடியோ கால் மூலம் உங்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டி உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் கொடுத்து ஏமாறக் கூடாது. பணம் கேட்டு மிரட்டினாலும் கொடுத்து ஏமாறக் கூடாது. சந்தேகப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவேண்டும்.

பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் செய்ய வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் புகாரை பதிவு செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News