நாமக்கல் ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தியதில் சுகாதாரமற்ற 60 கிலோ இறைச்சி பறிமுதல்.

Update: 2021-09-15 07:15 GMT

பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளை அழிக்கும் அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அசைவ ஹோட்டல் ஒன்றில் சில நாட்கள் முன்பு, பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அசைவ ஓட்டல்களில் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையொட்டி, நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில், அலுவலர்கள் நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். சுமார் 20 ஓட்டல்களில் நடைபெற்ற சோதனையில் உணவு பண்டங்களில் செயற்கை கலர்கள் சேர்க்கப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 65 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 10 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 8 ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். மாவட்டத்தில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தி விதிமுறைகளை மீறும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News