கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Namakkal news- கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2024-06-22 10:45 GMT

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற, போதை ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் உமா பேசினார்.

Namakkal news, Namakkal news today- கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், போதை ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. தாலுகா அளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. அதில் கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபானம் விற்பனை தடுப்பு குறித்து வருவாய்த் துறை, போலீஸ் துறை, வளர்ச்சி துறை ஆகிய துறைகளை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கள்ளச்சாரயம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கிராம அளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் இதன்மூலம் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க முடியும். கள்ளச்சாராயம் அருந்துவதால் கண் பார்வை இழப்பு, சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாம் அனைவரும் சமுதாய பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வளரும் அடுத்த தலைமுறையினர் தவறான பாதையில் செல்வதை நாம் தடுக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு நல்லவற்றை நாம் கற்றுத் தர வேண்டும். கிராம நிர்வாக அலுலவர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, கிராம அளவில் மறைமுகமாக ஏதேனும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து வாரந்தோறும் நடைபெறும் மதுவிலக்கு ஆய்வுக் கூட்டத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் மாதந்தோறும் தங்களது பகுதிகளில் எவ்வித தடைசெய்யப்பட்ட போதை பொருள், கள்ளசாராயம் விற்பனை அல்லது தயாரித்தல் போன்ற குற்ற நடவடிக்கைகள் நடைபெறவில்லை என்ற உறுதிமொழியை சம்மந்தப்பட்ட தாசில்தார்கள் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு தவறாமல் சமர்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

கட்டணமில்லா எண் வெளியீடு:

கள்ளச்சாராயம் விற்பனை குறித்த தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் 88383-52334 என்ற வாட்ஸ் அப் எண்கணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News