ஆந்திராவுக்கு 2 லட்சம் டன் மக்காச்சோளம் வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி

ஆந்திர மாநில கோழிப்பண்ணையாளர்களுக்காக, வெளி நாட்டில் இருந்து 2 லட்சம் டன் மக்காச்சோளம் இறக்குமதி வரி இல்லாமல், இறக்குமதி செய்வதற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2024-09-27 02:00 GMT

பைல் படம்

ஆந்திர மாநில கோழிப்பண்ணையாளர்களுக்காக, வெளி நாட்டில் இருந்து 2 லட்சம் டன் மக்காச்சோளம் இறக்குமதி வரி இல்லாமல், இறக்குமதி செய்வதற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இதில் 3,000 விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர், மேலும் சுமார் 10 லட்சம் பேர் கோழிப்பண்ணை தொழிலை நம்பி வாழ்வாதாரமாக உள்ளனர். தற்போது அங்கு, கோழித்தீவனத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையொட்டி, ஆந்திர மாநில பாஜக தலைவரும், ராஜமுந்திரி லோக்சபா தொகுதி எம்.பி.யுமான டி.புரந்தேஸ்வரி தலைமையில், கோழிப்பண்ணையாளர்கள் குழு டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து, ஆந்திராவில் உள்ள கோழிப்பண்ணையாளர்களுக்கு கோழித்தீவனத்திற்காக மக்காச்சோளத்தை ஒதுக்கீடு செய்யக்கோரியது.

ஆந்திராவில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில், The Tariff Rate Quota (TRQ) திட்டத்தின் கீழ் 2 லட்சம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். கட்டண விகித ஒதுக்கீடு (TRQ) திட்டம் என்பது குறிப்பிட்ட பொருட்களை, ஒரு குறிப்பிட்ட அளவு, குறைந்த இறக்குமதி வரி விகிதத்தில், ஒரு நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கும் ஒரு முறையாகும். இந்த திட்டத்தின்கீழ் மத்திய நிதியமைச்சகம், ஆந்திர மாநிலத்திற்கு இறக்குமதி வரி இல்லாமல் 2 லட்சம் டன் மக்காச்சோளம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்.பி. புரந்தரேஸ்வரி மற்றும் பண்ணையாளர்கள் மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News