மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதி ரூ. 6 லட்சம் வழங்கல்
ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை, ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார்.;
ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார். அருகில் கலெக்டர் உமா, எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.
நாமக்கல்,
ஆண்டாபுரத்தில் மின்சாரம் தாக்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை, ராஜேஸ்குமார் எம்.பி., வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (60). இவரது மனைவி இளஞ்சியம் (50). தம்பதியரின் இரண்டாவது மகன் அருள் (35). அவருக்கு திருமணமாகி சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி (3) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில், கடந்த 7ம் தேதி, செல்வம் அவரது மனைவி இளஞ்சியம், பேரன், பேத்திகளுடன் விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மாலை, 3:30 மணிக்கு, இளஞ்சியம், தனது பேரன் சுஜித், பேத்தி ஐவிழி ஆகியோருடன், சுப்ரமணியின் விவசாய நிலத்தை ஒட்டியவாறு உள்ள வரப்பில் நடந்து வீட்டுக்கு சென்றனர். அப்போது, அருகில் சுப்ரமணியின் தோட்டத்தில் போடப்பட்டிருந்த கம்பிவேலியில் மின்கசிவு ஏற்பட்டது தெரியாததால், அ¬த் தொட்ட இளஞ்சியம் அவரது பேரன் சுஜீத், பேத்தி ஐவிழி ஆகியோர் மின்சாரம் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ. 2 லட்சம் வீதம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி, உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், தமிழக முதல்வர் அறிவித்தப்படி, பொது நிவாரண நிதியிலிருந்து, தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார். கலெக்டர் உமா, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.