உடுமலை நகரில் தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம்
பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்துச் சுற்றுப்பாதையில் பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவித்தனர்;
உடுமலை: பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 17) உடுமலை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேரோட்டம், இன்று மாலை 4:00 மணிக்கு கோவிலில் இருந்து துவங்குகிறது. பொள்ளாச்சி சாலையிலுள்ள மாரியம்மன் கோவில் முனையிலிருந்து தேரம் புறப்பட்டு, தளி ரோடு சந்திப்பு, குட்டைத்திடல், தலகொண்டம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாகச் செல்லும். பின்னர், மீண்டும் பொள்ளாச்சி சாலையில் இணைந்து கோவிலை வந்தடையும்.
இதனால், விழா நேரத்தில் நகர்ப்பகுதியில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில், போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள், பாலப்பம்பட்டி நான்கு வழிச்சாலையை மையமாகக் கொண்டு மாற்றுப் பாதையைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.