கூடுதலாக 101 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மேலும் 101 நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துச்செல்ல விண்ணப்பிக்கலாம்.;

Update: 2025-04-17 11:30 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மேலும் 101 நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துச்செல்ல விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பொதுப்பணித்துறை மற்றும் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுபாட்டிலுள்ள 170 ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளிலிருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளளது. இதுவரை இத்திட்டத்தில் 3,512 விவசாயிகள் மற்றும்பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர்.

தமிழக அரசால் பருவமழை காலத்திற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளிலிருந்து வண்டல்மண் மற்றும் களிமண் எடுத்துச்செல்ல, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் மாவட்ட நீர்நிலைகளின் கொள்ளளவு மற்றும் நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரகவளர்ச்சித்துறை, ஊராட்சித் துறை மற்றும் நகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ள மேலும், 101 அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துச்செல்ல, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் வீதம் 25 யூனிட் வரை வழங்கப்படும். புஞ்சை நிலம் வைத்துள்ளவர்களுக்கு- 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் வீதம் 30 யூனிட் வரை அனுமதி வழங்கப்படும். மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு 60 க.மீட்டர் அல்லது 20 யூனிட் வரை வழங்கப்படும். வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட விஓவிடம் சான்று பெற்று, டிஎன்இசேவை.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் மூலம் சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்று 30 நாட்களுக்குள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள வேண்டும். வண்டல்மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் குறித்த விபரங்களை சம்மந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News