முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி நாமக்கல்லில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

நாமக்கல் வருகை தரும், முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு வழங்குவது குறித்து ஆலோசிக்க, கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

Update: 2024-10-06 09:45 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் நகருக்கு வருகிற 15ம் தேதி வருகை தரும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்து ஆலோசிக்க, கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நாமக்கல்லில் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான, ராஜேஷ்குமார் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் நாளை 7ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நாமக்கல் மோகனூர் ரோடு, முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் கூட்டத்திற்கு தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

வருகின்ற 15ம் தேதி, நாமக்கல் மாநகரில் பரமத்தி ரோட்டில், செலம்பகவுண்டர் பூங்கா பகுதியில் அமைந்துள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர், நாமக்கல், சேலம் ரோட்டில், பொம்மைகுட்டை மேட்டில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, 20,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். எனவே, முன்னாள் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், சார்பு அணியினர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News