குமாரபாளையத்தில் இருந்து சபரிமலை சேவைக்கு சென்ற 50 மாணவர்கள்
குமாரபாளையத்தில் 50 மாணவர்கள் சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.;
சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 50 மாணவர்கள்
குமாரபாளையத்தில் 50 மாணவர்கள் சபரிமலை சேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலைக்கு சேவை செய்ய ஐயப்ப பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை பல கட்டங்களாக அனுப்பி வைப்பது வழக்கம்.
இதுவரை 65 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். குமாரபாளையம் ஜெட் மண்டபத்திலிருந்து இவர்களை வழியனுப்பும் விழாவிற்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட செயலர் ஜெகதீஷ் கூறியதாவது:
சபரிமலை சேவைக்கு செல்லும் மாணவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்குதல், ஆக்சிஜன் சுவாசம் வழங்குதல், உடல்நலம் பாதித்த, மயங்கி விழுந்த நபர்களை மருத்துவமனையில் சேர்த்தல், இறந்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்த்தல், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல சேவைகள் செய்வார்கள். ஒவ்வொரு குழுவினர் 15 நாட்கள் சேவை செய்வார்கள். இவர்கள் அங்கிருந்து புறப்படும் முன்பு அடுத்த குழுவினர் செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மற்றும் நாராயண நகர் கிளை சார்பில் நவரத்தின விழா மாவட்ட செயலர் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட கையேட்டினை தேசிய தலைவர் ஐயப்பன் வெளியிட்டார். சபரிமலையில் பக்தர்களுக்கு சேவை செய்திட 32 ஆண்டுகளாக மாணவர்களை அனுப்பி வைத்த கந்தசாமி கண்டர், கே.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகிகளுக்கும், ஐயப்பா சேவா சங்க கிளை நிர்வாகிகளுக்கும் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை மத்திய மாநில துணை தலைவர் பாலசுப்ரமணியம் வழங்கினார். சபரிமலையில் அன்னதானம் வழங்க, மளிகை பொருட்கள், நிதி உதவி வழங்கி உதவியவர்களுக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பிரபு சான்றிதழ்கள், விருது வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட அளவில் 86 ஐயப்ப சேவா கிளை சங்கங்கள் இருந்த நிலையில் புதியதாக 10 சேவா சங்க கிளைகள் நிறுவப்பட்டு, நிர்வாகிகள் நியமனம் செய்து, பட்டயங்களை மாவட்ட பொருளர் செங்கோட்டையன் வழங்கினார். தொடர்ந்து கரிமலையில் 60 நாட்கள் சேவை செய்த மாவட்ட கவுரவ தலைவர், வழக்கறிஞர் கார்த்திகேயன் கவுரவிக்கப்பட்டார். திருவண்ணாமலை அருகே செங்கம் பகுதியிலிருந்து சபரிமலை சென்ற பஸ் குமாரபாளையத்தில் விபத்துக்குள்ளான போது, அதில் சிக்கியவர்களை மீட்டு சேவை செய்த குமாரபாளையம் கருமாரியம்மன் கிளை பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலர் ஜெகதீஷ் பாராட்டி விருது வழங்கினார்.
மேலும் ஆக்சிஜன் சேவை, ஸ்ட்ரெட்சர் சேவை, மருத்துவ உதவிகள் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிர்வாகிகள் ஸ்ரீதர், நாராயணன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.