கரூரில் இரவு நேரத்தில் திடீர் சாலை மறியல்

பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய நெரிசலான இடத்தில் அனுமதி இன்றி தரைக்கடைகள், தள்ளுவண்டியில் காய்கறி கடைகள் போடுவதற்கு எதிர்ப்பு

Update: 2022-01-31 18:05 GMT

பைல் படம்

கரூர் நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய நெரிசலான இடத்தில் அனுமதி இன்றி தரைக்கடைகள், தள்ளுவண்டியில் காய்கறி கடைகள் போடுவதால் அப்பகுதி தினசரி சந்தைக் கடைகாரர்களுக்கு விற்பனை பாதிக்கப்படுவதாக கூறி சாலைமறியல் போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டதால்  அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி சார்பில் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 90க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதே பகுதியில் சிறிது தூரத்தில் உள்ள செங்குந்தபுரம் மெயின் ரோடு, காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு ஓரத்திலும் தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்து பலரும் காய்கள் விற்பனை செய்கின்றனர்.

இப்பகுதி பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழி என்பதால் ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் வீடு திரும்பும் போது காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையப் பகுதிகளில் காய்கறி கடை போட்டிருக்கும் வியாபாரிகளுக்கு வியாபாரம் ஆகவில்லை எனக் கூறி சுமார் 50க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் செங்குந்தபுரம் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News