வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: அரசு பணம் மாயம்

கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் அரசு பணம் 2,730 மாயமானது குறித்து விசாரணை நடைபெற்றது.

Update: 2021-10-29 15:15 GMT

கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் சோதனை நடத்த செல்லும் லஞ்ச ஒழிப்பு போலீசார்.

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகமும் உள்ளது.  பிற்பகலில்  இங்கு வந்த கரூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொதுமக்களோடு, பொதுமக்களாக அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

குடும்ப அட்டை வழங்க 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் 6க்கும் மேற்பட்டோர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற சோதனையில் கடந்த மாதத்தில் 2,920 ரூபாய்க்கு ரசீது போடப்பட்டுள்ள நிலையில் அரசின் பணம் 190 மட்டுமே கையிருப்பில் வைத்துள்ளனர்.

மீதமுள்ள 2,730 ரூபாய் பணம் எங்கே, என்னானது என்பது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் ரவிவர்மன், வருவாய் அலுவலர்கள் சரவணன் மற்றும் நவீன் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.

இன்னும் ஒரு சில தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News