பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.;
தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.
பெருந்துறை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று (பிப்ரவரி 6ம் தேதி) காலை தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 70க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
காலை 8.30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் சாம்ராஜ்பாளையம் பிரிவு கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களான விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (வயது 20), ஹரி(20) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர்.இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காயமடைந்து பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.