கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகை கொள்ளை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
கோபி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் 3½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவகாளிபாளையம் செந்தூர்நகரை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கிருத்திகா (வயது 36). இவர், கோபி வேட்டைக்காரன் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விக்னேஸ்வரன் உத்திரபிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவிற்கு சென்றுள்ளார். கிருத்திகா வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு அன்று மாலை அலுவலகத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர்கள் கிருத்திகாவிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே கிருத்திகா வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் செயின், ¾ பவுன் கம்மல், 50 கிராம் வெள்ளி கொலுசு மற்றும் லேப்டாப் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து கிருத்திகா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீசார் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.