ஈரோட்டில் நடப்பாண்டில் ரூ.3.90 கோடிக்கு கதர் ஆடைகள் விற்க இலக்கு..!
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ. 3.90 கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.3.90 கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா திங்கட்கிழமை (அக்.2) இன்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, காந்தி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து கதர் ஆடைகளை பார்வையிட்டார்.
பின்னர், இதுகுறித்து ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 150 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.225 முதல் ரூ.250 வரை ஊதியமாகப் பெறுகின்றனர். 2022-23-ம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2022-23ம் ஆண்டு ரூ.2.06 கோடி மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2 கதர் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வுற்பத்தி கிளைகளின் மூலமாக 90 கதர், பாலியஸ்டர் துணி உற்பத்தி தறிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கதர் மற்றும் பாலியஸ்டர் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலமாக 90 நெசவாளர்களுக்கு நேரடியாகவும்,சுமார் 160 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்து 500 வரை நெசவு கூலி பெறுகின்றனர். மேலும் இக்கதர் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2022-2023ம் ஆண்டு ரூ.80 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2022-2023-ம் ஆண்டு ரூ.2.85 கோடி மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் துணிகள் உற்பத்தி குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு நாளது வரை ரூ.88 லட்சம் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நூற்போர் நெய்வோர் உறுப்பினர்களுக்கு என அமைக்கப்பட்ட காதி நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலமாக நூற்பாளர் மற்றும் நெசவாளர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் கல்வி உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிராமிய நூற்பு நிலையங்களில் நூற்கப்படும் நூல் கதர் உற்பத்திக் கிளைகளின் மூலமாக கதர் மற்றும் பாலியஸ்டர் ரக துணிகளாக கதர் நெசவாளர்கள் மூலமாக கையினால் உற்பத்தி செய்யப்பட்டு "காதிகிராப்ட்" மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 3 காதி கிராப்டுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 2021-22ல் ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடான ரூ.1.60 கோடி ரூ.1.24 கோடிக்கு கதர், பட்டு, உல்லன் மற்றும் பாலிஸ்டர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2022-2023ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.2 கோடி தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடுடாக நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.9 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டு 2023-2024ம் ஆண்டிற்கு ரூ.3.90 கோடி தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடுடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கதர் துணிகளின் விற்பனையை அதிகரித்திடும் எண்ணத்துடன் அனைத்து வகை கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ஆடைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது.
கதர் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, சந்தன மாலைகள், சுகப்பிரியா வலி நிவாரணி, எழில் சாம்பு மற்றும் தேன் வகைகளுக்கு 2022-23ம் ஆண்டில் விற்பனை குறியீடாக ரூ.2.12 கோடி நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.1.08 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023- 2024ம் ஆண்டிற்கு கிராமப் பொருட்கள் விற்பனைக் குறியீடாக ரூ.1.20 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது வரை ரூ.44 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டில் கிராமப்பொருட்கள் உற்பத்தி குறியீடு ரூ.1.40 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் கிராமத்தொழில் அலகுகள் மூலம் ரூ.1.24 கோடி எய்தப்பட்டுள்ளது. 2023-2024ம் ஆண்டில் கிராமப்பொருட்கள் உற்பத்தி குறியீடு ரூ.1.70 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது வரை ரூ.60 லட்சத்திற்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மொடக்குறிச்சியில் குளியல் சோப்பு, மூலிகா சோப்பு, புதிய குறிஞ்சி சந்தனம், புதிய குறிஞ்சி வேம்பு சோப்புகள் உற்பத்தி செயல்பட்டு வருகிறது. மேலும், சத்தியமங்கலம் செண்பகப்புதூரில் கைமுறைகாகித அலகு செயல்பட்டு வருகிறது. இவ்வலகில் உற்பத்தி செய்யப்படும் கைக்காகிதம் மற்றும் பதிவேடுகள், ஆவண காப்பகம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களின் தேவை நமூனாவிற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு 31 பயனாளிகளுக்கு மானியமாக ரூ.1.68 கோடியும், 240 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டதில் 17 பயனாளிகளுக்கு மானியமாகரூ.1.03 கோடி அனுமதிக்கப்பட்டு அவரவர் வங்கி கணக்கிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டிற்கு 58 பயனாளிகளுக்கு மானியமாக ரூ.81.41 லட்சமும், 260 நபர்களுக்கு வேலைவாய்ப்பு குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டத்தில் 16 பயனாளிகளுக்கு மானியமாக ரூ.86.07 லட்சம் அனுமதிக்கப்பட்டு அவரவர் வங்கி கணக்கிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. கதர் பருத்தி, கதர் பட்டு மற்றும் பாலிஸ்டர் இரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி (ஜி.எஸ்.டி விலக்கு) அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்திய குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையையாவது வாங்கி ஏழை எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம். காந்தி பிறந்த நாளில் காதிக்கும், கைத்தறிக்கும் கைக்கொடுப்போம் எனத் தெரிவித்தார். இவ்விழாவில், உதவி இயக்குநர் (கதர் கிராம தொழில்) சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஜெயக்குமார், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.